Friday, October 20, 2017

Who is Guru and Lord Dakshinamurthy ?

தெட்சிணாமூர்த்தி என்பவர் யார்?




தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.

ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.

உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.

இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தெட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி.

தெட்சிணாமூர்த்தி சிவகுரு,தெற்கு நோக்கியும் குரு தேவகுரு வடக்கு நோக்கியும் உள்ளனர்

தெட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.

குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

தெட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.

சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்,

குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல...

தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்.

அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

குருப்பெயர்ச்சியன்று தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள்.

இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தெட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும்தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தெட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.

அதுவும் தவறு.

குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.

எனவே தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.
------------------------------------
மேலதிகத் தகவலுக்கு: https://en.wikipedia.org/wiki/Dakshinamurthy

படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்

Source: http://classroom2007.blogspot.in

1 comment: